காலநிலை மாற்றத்தால் 2 மில்லியன் மக்கள் பலி! வெளியான அதிர்ச்சி தகவல்
பூமியில் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளால் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 2 மில்லியன் மக்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் தற்போது முக்கிய கவனம் பெற்று வருகின்றன. பருவநிலை மாற்றத்தால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுதல்,வழக்கத்திற்கு மாறான வெப்ப அலைகளின் தாக்கம், அதன் காரணமாக நிகழும் காட்டுத்தீ விபத்துகள், அதீத மழைப்பொழிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட உலக வானிலை மையம் (World Meteorological Organization) காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பெரும் சேதத்தை விளைவித்துவருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆய்வின்படி கடந்த 1970 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 11,000 பேரிடர் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த 50 ஆண்டுகளில் மட்டும் 2 மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர் மற்றும் 3.64 தட்ரில்லியன் டொலர்கள் மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், எத்தியோப்பியாவில் 1983-ல் ஏற்பட்ட வறட்சியில் அதிகபட்சமாக 3 லட்சம் பேர் மரணம் அடைந்தனர். அதேபோல், 2005-ல் ஏற்பட்ட கத்ரீனா சூறாவளியில் 163.61 டொலர்கள் மதிப்பலினான பொருட்சேதம் ஏற்றப்பட்டுள்ளது என இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பலியான 2 மில்லியன் மக்களில் 91 சதவிகிதத்தினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனும் அதிர்ச்சிகரத் தகவலை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.