தவறுதலாக மார்க்கெட் மீது தாக்குதல் நடத்திய விமானப் படை - 200 பொதுமக்கள் உயிரிழப்பு
நைஜீரியா விமானப் படை தவறுதலாக மார்க்கெட் மீது நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
200 பொதுமக்கள் உயிரிழப்பு
வடக்கு நைஜீரியாவின் போர்னோ மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், போகோ ஹராம் என்ற ஜிஹாதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

போர்னோ மாநில எல்லையில் உள்ள ஜிஹாதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்க திட்டமிட்ட நைஜீரிய விமான படை, நேற்று போர்னோ மாநில எல்லையருகே உள்ள யோபே மாநிலத்தில் ஜில்லி பகுதியில் உள்ள வார சந்தையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
அந்த பகுதி கவுன்சிலர் லாவான் ஸன்னா நூர் கெய்டம், இது ஒரு பேரழிவு சம்பவம் இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 200 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு பிழை ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறாக பிழையான துப்பாக்கிசூடுகள் மூலம், 2017 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 500 பொதுமக்கள் நைஜீரியாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
உளவுத் தகவல் சேகரிப்பில் உள்ள குறைபாடுகளையும், அத்துடன் தரைப்படைகள், விமானப்படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததையும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போகோ ஹராம்
2000 களின் முற்பகுதியில் நிறுவப்பட்ட போகோ ஹராம்(boko haram) ஜிஹாதி குழு, ஆரம்பத்தில் மேற்கத்திய பாணிக் கல்வியை எதிர்த்ததுடன், கடுமையான ஷரியா சட்டத்தால் ஆளப்படும் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவவும் முயன்றது.
அதன் பின்னர் அதன் தலைமை கொல்லப்பட்டு, புதிய தலைமையின் குழு சென்றதும், ஆட்கடத்தல், குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது.
2014 ஆம் ஆண்டில் சிபோக்கில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை இந்த குழு கடத்தியது. இந்த அமைப்பின் அட்டூழியத்தால் மில்லியன் கணக்கான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |