உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல்; 17 ஆண்டுகளாக இந்த நாடு தான் முதலிடம்
வர்த்தக போர் மற்றும் நாடுகளுக்கிடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில நாடுகள் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டி வருகின்றன.
Institute for Economics & Peace என்ற நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி குறியீட்டை (Global Peace Index) வெளியிட்டுள்ளது.
அண்டை நாடுகளுடனான உறவு, வெளிப்புற மோதல்கள், உள்நாட்டு மோதல்கள், அரசியல் நிலைத்தன்மை,எ பயங்கரவாதம், ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு,போதை பொருள் பயன்பாடு உள்ளிட்ட 23 குறியீடுகளை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து
2008 ஆம் ஆண்டு முதல் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் வகிக்கிறது.
பாதுகாப்பு, மோதல் இல்லாமை, குறைந்த ராணுவ மயமாக்கல் ஆகிய 3 குறியீடுகளிலும், ஐஸ்லாந்து முன்னணி வகிக்கிறது. மேலும், கடந்த ஆண்டை விட 2% மதிப்பெண் அதிகரித்துள்ளது.
ஐஸ்லாந்தில் நள்ளிரவு நேரங்களில் கூட பாதுகாப்பாக தனியாக வெளியே சென்று வர முடியும். காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், உலக அளவில் பாலின சமத்துவதில் முன்னணியில் உள்ளது.
அயர்லாந்து
குறைந்து வரும் ராணுவ மயமாக்கல் மற்றும் குறைந்து வரும் உள்நாட்டு சர்வதேச மோதல்கள் காரணமாக அயர்லாந்து 2வது இடம் பிடித்துள்ளது.
மேலும், நேட்டோவில் உறுப்பினராக சேராத ஐரோப்பிய நாடாக, அயர்லாந்து தனது ராணுவ நடுநிலையை கடைபிடித்து வருகிறது.
நியூசிலாந்து
பாதுகாப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் குறைந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக நியூசிலாந்து 5வது இடத்தில் இருந்து முன்னேறி 3வது இடம் பிடித்துள்ளது.
பசுபிக் பெருங்கடலில் ஒரு தீவாக உள்ள நியூசிலாந்திற்கு அதன் புவியியல் அமைப்பு இயற்கையான பாதுகாப்பை வழங்குகிறது.
மேலும், அதன் உள்நாட்டு கொள்கைகளும், கடுமையான துப்பாக்கி துப்பாக்கி சட்டங்களும் அங்குள்ள மக்களுக்கு அமைதியான சூழலை வழங்குகிறது.
ஆஸ்திரியா
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா ஒரு இடம் பின்தங்கி 4வது இடம் வகிக்கிறது. அயர்லாந்தை போல், ஆஸ்திரியாவும் நேட்டோவில் உறுப்பினராக இணையாமல் நடுநிலை வகிக்கிறது.
இங்குள்ள மக்கள் நள்ளிரவு நேரங்களில் வீடுகளை பூட்டாமல் இருக்கின்றனர். வாகனங்களை லாக் செய்யாமல் வெளியே விட்டு செல்கின்றனர்.
சுவிட்சர்லாந்து
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து ஒரு இடம் பின்தங்கி 5வது இடம் வகிக்கிறது.
சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், சுலோவீனியா, பின்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்தியாவின் நிலை?
இந்த பட்டியலில், இலங்கை 97 வது இடத்திலும், இந்தியா 115 வது இடத்திலும், பாகிஸ்தான் 144வது இடத்திலும் உள்ளது.
மேலும், கனடா 13 வது இடத்திலும், ஜேர்மனி 20 வது இடத்திலும், பிரித்தானியா 30 வது இடத்திலும், பிரான்ஸ் 74வது இடத்திலும், அமெரிக்கா 128வது இடத்திலும் உள்ளது.
சவுதி அரேபியா 90 வது இடத்திலும், சீனா 98 வது இடத்திலும், பஹ்ரைன் 100 வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 52 வது இடத்திலும், ஓமன் 42 வது இடத்திலும், குவைத் 31 வது இடத்திலும், கத்தார் 27 வது இடத்திலும், மலேசியா 13 வது இடத்திலும் உள்ளது.
அமைதியற்ற நாடுகளின் பட்டியலில், ரஷ்யா, உக்ரைன், சூடான், காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |