உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்; 7 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கும் UAE - இந்தியாவின் நிலை?
2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை arton capital நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டின் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லா பயணம் மேற்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளாக UAE முதலிடம்
இந்த பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக, 179 புள்ளிகளுடன் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 134 நாடுகளுக்கு விசா இல்லாமலும் 45 நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலம் பயணம் மேற்கொள்ளலாம். 19 நாடுகளுக்கு செல்ல விசா தேவைப்படுகிறது.
வலுவான பாஸ்போர்ட், அதிக தனிநபர் வருமானம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவை அமீரகத்தின் 10 ஆண்டு கோல்டன் விசாவை தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் மில்லியனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் 175 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இதில், கடந்த ஆண்டு 30வது இடத்திலிருந்த சிங்கப்பூர் இந்த ஆண்டில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், சுவீடன், நெதர்லாந்து, பின்லாந்து, லக்சம்பர்க், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுகல், கிரீஸ், ஆஸ்திரியா, மலேசியா, நோர்வே, அயர்லாந்து, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் 174 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. மலேசியா 41வது இடத்திலிருந்து 17வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பிரித்தானியா மற்றும் கனடா 169 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், அமெரிக்கா 168 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளது.
இந்தியா இலங்கையின் நிலை?
74 புள்ளிகளுடன் இந்தியா 67வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 29 நாடுகளுக்கு விசா இல்லாமலும் 45 நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலம் பயணம் மேற்கொள்ளலாம்.

124 நாடுகளுக்கு செல்ல விசா தேவைப்படுகிறது. 57 புள்ளிகளுடன் இலங்கை 84வது இடத்திலும், 45 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 91வது இடத்திலும் உள்ளது.

இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 21 நாடுகளுக்கு விசா இல்லாமலும் 36 நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலம் பயணம் மேற்கொள்ளலாம். 141 நாடுகளுக்கு செல்ல விசா தேவைப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |