மியான்மர் மடாலயத்தில் படுகொலை: 3 புத்த பிக்குகள் உட்பட 22 பேர் பலி
மியான்மர் மடாலயத்தில் நடந்த படுகொலையில் மூன்று புத்த பிக்குகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.
மடாலயத்தில் படுகொலை
கடந்த வாரம் மத்திய மியான்மரில் மூன்று புத்த துறவிகள் உட்பட குறைந்தது 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி குழுக்கள் மற்றும் ராணுவத்திற்கு இடையே நடைபெற்று வரும் இந்த சண்டையில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இது உலக நாடுகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன.
தெற்கு ஷான் மாகாணத்தில் சிறுவர்கள், புத்த பிக்குகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்ட இந்த மடாலய தாக்குதலுக்கு இராணுவமே பொறுப்பு என்று கிளர்ச்சி குழுக்களும் கிளர்ச்சி குழுக்களே காரணம் என்று இராணுவமும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.
மியான்மரில் நடப்பது என்ன?
மியான்மரில் பிப்ரவரி 2021-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவத்திற்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்களும் சண்டையிட்டு வருகின்றன.
பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் இம்மாத தொடக்கத்தில் சகாயங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மியான்மர் ராணுவத்தின் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருக்கும் தாக்குதல் உலக நாடுகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
AP