பிலிப்பைன்சில் குமுறும் எரிமலை: வெளியேறும் விஷவாயு; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகிலுள்ள, தால் (Taal) எரிமலை குமுறிவருகிறது.
இரு தினங்களுக்கு முன் குமுறத் தொடங்கிய தால் எரிமலை, வெடித்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், அதை உறுதியாகச் சொல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோமீட்டர் உயரத்திற்குப் புகையையும் சாம்பலையும் அது கக்கியதையடுத்து, எரிமலையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து குறைந்தது 2,400 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அவர்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களில், கிருமித்தொற்று ஏற்பட்டுவிடாமல் இருக்க, அதிகாரிகள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஒரு அழகிய ஏரியின் மீது அமர்ந்திருக்கும் தால் எரிமலை, பல நாட்களாக நச்சு வாயுவை (sulphur dioxide) வெளியேற்றிவருகிறது. அதனால் மணிலா மற்றும் சுற்றியுள்ள பல மாகாணங்களில் தடிமனான மூடுபனியை உருவாக்கி வருகிறது.
தற்போதைய வெடிப்பின் மோசமான சூழ்நிலையில் எரிமலையில் இருந்து வளியேறும் நச்சு வாயுவால், 317,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படக்கூடும் என்று சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.