பால்கனியில் தக்காளி தோட்டம்! 250 கிலோ தக்காளி பயிரிட்டு சாதனை
இந்திய மாநிலம் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டின் பால்கனியில் 250 கிலோ தக்காளியை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார்.
தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அவதி
நாடு முழுவதும் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
தக்காளியா, தங்கமா என்று கேட்கக் கூடிய அளவுக்கு வந்துவிட்டது என்றும் சிலர் கூறினர். சில திருமணங்களில் தக்காளியை பரிசாக கொடுக்கும் பழக்கமும் வந்தது.
உத்தர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார்.அதுமட்டுமில்லாமல், ஹோட்டல்களிலும் தக்காளி இல்லாமல் சமைத்து வந்தனர்.
பால்கனியில் தக்காளி தோட்டம்
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த தோட்டக்கலை ஆர்வலரான விக்ரம் பாண்டே என்பவர் நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து வருவது பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய நிலையில் உள்ளூர் அளவில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு புதுமையான முயற்சியில் ஈடுபட்டார்.
இவருக்கு, ஆரம்பத்தில் குறைந்த இடத்தில் தக்காளியை எப்படி பயிரிடுவது என்ற கவலைகள் இருந்தபோதிலும், 600 சதுர அடி இருந்த தனது பால்கனியை ஒரு சிறிய தக்காளி தோட்டமாக மாற்றினார்.
பின்னர், தனது கூரையில் இரண்டரை குவிண்டால் (250 கிலோகிராம்) தக்காளியை வெற்றிகரமாக பயிரிட்டார். தக்காளி விலை உயர்வுக்கு மத்தியில் விக்ரம் பாண்டே செய்த சாதனை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையில், நேபாளத்தில் இருந்து இந்தியா தக்காளியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |