நடுக்கடலில் படகில் தத்தளித்த 257 அகதிகள் மீட்பு!
துனிசியா அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த 257 அகதிகளை தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டு இத்தாலிக்கு அழைத்து வந்துள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி, வறுமை காரணமாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்ற வாரம் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மொரோக்கோ, வங்கதேசம் , எகிப்து, சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை, SOS Mediterranee என்னும் தொண்டு நிறுவனத்தின் கப்பல் மூலம் இத்தாலியின் டிரப்பானி (Trapani) துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று துனிசியா நாட்டின் அருகே சர்வதேச கடல் பகுதியில் படகில் தத்தளித்த 257 அகதிகள் மீட்கப்பட்டு, இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள டிராபனி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை அவ்வாறு படகில் புறப்பட்ட 1,100-க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய கடல் பகுதியில் பலியாகி உள்ளதாக ஐநாவின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.