சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட இந்தியர்கள்! வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதி
தமிழக மாவட்டம், கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட இந்தியர்கள், வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட இந்தியர்கள்
கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி பகுதியில் டெல்டா எலக்ட்ரானிக் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொல்கத்தாவை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு வேலை செய்யும் 150 தொழிலாளர்களுக்கு ஆனந்தன் என்பவர் நேற்று கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் சேட்டு என்கிற சென்னயன் என்பவரது தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸை வாங்கிக் கொடுத்துள்ளார்.
காலாவதியான உணவா?
இதை சாப்பிட்ட பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 26 வட இந்தியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களின் ரத்த மாதிரியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதை வைத்து சிக்கன் ரைஸ் காலாவதியானதா அல்லது வேறு காரணமா என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில், சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |