உலகத் தோல்வி என்ற அப்பா... பதிலுக்கு 30 வயது மகன் செய்த கொடுஞ்செயல்
இத்தாலியில் பணம் தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல், இறுதியில் சொந்த தந்தையையும் தாயாரையும் கொலை செய்யும் அளவுக்கு அந்த மகனை தூண்டியுள்ளது.
இத்தாலியின் போல்சானோ நகரில் வசிக்கும் 30 வயதான பென்னோ நியூமெய்ர் தனது பெற்றோரைக் கொன்றதாக பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிப்ரவரி 11ம் திகதி பதிவு செய்யப்பட்ட இந்த ஒப்புதல் வாக்குமூலம், தற்போது உள்ளூர் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது
. சம்பவத்தன்று, ஜனவரி 4ம் திகதி, இனி ஒருக்காலும் பெற்றோருடன் வாதிடுவதாக இல்லை என முடிவு செய்து பென்னோ தமது அறைக்கு சென்றுள்ளார்.
அசதி காரணமாக தூங்கியும் போயுள்ளார். இதனிடையே தாயார் லாரா பெர்செல்லி, அவரது தாயாரை சந்திக்க மருத்துவமனை சென்றுள்ளார்.
இந்த நிலையில் பென்னோவின் தந்தை பீற்றர், தூக்கத்தில் இருந்த பென்னோவை எழுப்பி, மீண்டும் பண விவகாரம் தொடர்பாகவே சத்தமிட்டுள்ளார்.
போல்சானோ நகருக்கு திரும்பிய பின்னர், மாதம் தோறும் வாடகை கட்டணமாக 350 யூரோ தமது பெற்றோரிடம் அளித்து வருவதாக கூறியுள்ள பென்னோ, அந்த தொகை கட்டுப்படியாகாது எனவும், தங்களுடன் வசிப்பது என்றால் 700 யூரோ கட்டணமாக அளிக்க வேண்டும் எனவும், இல்லை எனில், வேறு குடியிருப்பு தேடிச் செல்ல வேண்டும் எனவும் சத்தமிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பென்னோவை சகோதரியுடன் ஒப்பிட்ட பீற்றர், உலகத் தோல்வி எனவும் கிண்டலடித்துள்ளார். பென்னோவின் சகோதரி அதிகமாக சம்பாதிக்கிறார் என்பது அவருக்கு தெரியும் என்பதால், தாம் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவதாக உணர்ந்ததாக பென்னோ பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மலையேற பயன்படுத்தும் கயிறால் தமது தந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், மருத்துவமனையில் இருந்து தாயார் வீடு திரும்ப காத்திருந்து, அதே கயிறால் தாயாரையும் நெரித்து கொன்றதாக பென்னோ பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்றோரின் மொபைல் போன்களை காட்டுப்பகுதியில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதில் ஒரு மொபைல் ஆற்றில் விழுந்து, அதன் மூலமே பென்னோ பொலிசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

