உக்ரைன் போரில் 32 இந்தியர்கள் உயிரிழப்பு - ரஷ்ய ராணுவத்தில் கட்டாய சேர்ப்பு
ரஷ்ய ராணுவத்தால் கட்டாயமாக உக்ரைன் போரில் ஈடுபட்டவர்களில் 32 இந்தியர்கள்.உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் போரில் 32 இந்தியர்கள் உயிரிழப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடங்கிய போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்த போரில், இதுவரை இரு நாடுகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதிக சம்பளம், நிரந்தர குடியுரிமை உள்ளிட்ட போலியான வாக்குறுதிகளை கூறி, இந்திய குடிமக்களை வேலைக்காக ரஷ்யாவிற்கு அழைத்து வரும் முகவர்கள், உக்ரைனுக்கு எதிரான போரில் கட்டாயப்படுத்தி ரஷ்யா ராணுவத்தில் சேர்த்து விடுகின்றனர்.
முறையான பயிற்சி இன்றி அவர்கள் போரில் ஈடுபடுத்தப்படும் சூழலில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
2025 டிசம்பரில், ரஷ்ய ஆயுதப்படைகளில் பணியாற்றிய 26 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், 7 பேர் காணாமல் போனதாகவும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்திருந்தார்.
தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்ததாகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இறந்தவர்கள் சிலரின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், 35 பேரை ரஷ்ய படையில் இருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவில் சுமார் 1 லட்சம் இந்திய தொழிலாளர்கள் உள்ள நிலையில், அதில் 214 பேர் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கபட்டதாகவும், தூதரக முயற்சி மூலம் 135 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |