650 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து; 2 குழந்தைகள் உட்பட 32 பேர் மரணம்
பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமா மற்றும் சென்ட்ரல் அண்டஸ் நகரை இணைக்கும் சாலையில் ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அந்த பஸ்சில் 63 பேர் பயணம் செய்தனர். கார்ரிடிரா சென்ட்ரல் (Carretera Central) சாலையில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 650 அடி (200 மீட்டர்) பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 32 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 6 வயது சிறுவனும் 3 வயது சிறுமியும் அடங்குவர்.
மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மலைப்பாங்கான பகுதியில் பேருந்து மிகவும் வேகமாக சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருவில் இரு தினங்களுக்கு முன்பு மற்றோரு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் 17 பேர் மரணம் அடைந்தனர்.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமை பெருவில் அமேசான் ஆற்றில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 22 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



