குழந்தைகள் உட்பட 39 பேர் கடலில் மூழ்கி பலியான பரிதாபம்! தொடரும் தேடுதல் பணி
துனிசிய கடற்கரையில் செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் 93 பேர் கொண்ட படகு மூழ்கியதில் பல குழந்தைகள் உட்பட 39 ஆப்பிரிக்க குடியேறியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு துனிசியாவில் உள்ள மத்திய தரைக்கடல் துறைமுக நகரமான Sfax-ல் இருந்து கடலில் மிதந்த அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று துனிசிய தேசிய காவல்படை தெரிவித்துள்ளது.
கடற்படை மற்றும் கடலோர காவல்படை குழுக்கள் மற்றும் தன்னார்வ மீன்பிடி படகுகள் சேர்ந்து 39 சடலங்களை கண்டுபிடித்துள்ளன. மேலும், மற்றோரு படகும் அதே பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
இரு கப்பல்களிலிருந்தும் மொத்தம் 165 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக துனிசிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் Sfax மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதே நேரத்தில், இன்னும் பலர் தப்பிக்க முயன்று கடலில் குதித்திருக்கலாம் அல்லது பலர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பதால், அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேறியவர்களில் பெரும்பாலோர் துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், அந்த இரண்டு படகுகள் இத்தாலிக்கு சென்றுகொண்டிருந்தது.
புலம்பெயர்ந்தோர்கள் கடன் வாங்கப்பட்ட பாழடைந்த நிலையில் இருந்த படகுகளில் வந்தது, இந்த விபத்துக்கள் காரணமாக இருக்கலாம் என்று துனிசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.