அமெரிக்காவில் மாயமான 4 இந்திய முதியவர்கள்! சிசிடிவி தென்பட்ட இருவர்: நடந்தது என்ன?
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 முதியவர்கள் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
4 இந்திய வம்சாவளி முதியவர்கள் மாயம்
நியூயார்க்கில் இருந்து மேற்கு வெர்ஜினியாவுக்குச் சாலை மார்க்கமாக பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு முதியவர்கள் கடந்த ஜூலை 29-ஆம் திகதி முதல் காணவில்லை.
பென்சில்வேனியாவில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் கடைசியாக அவர்கள் பார்க்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்கள் ஆஷா திவான் (85), கிஷோர் திவான் (89), சைலேஷ் திவான் (86) மற்றும் கீதா திவான் (84) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நியூயார்க் உரிமத் தகடு கொண்ட EKW2611 என்ற எண்ணுடன் கூடிய வெளிர் பச்சை நிற 2009 டொயோட்டா கேம்ரி காரில் பஃபேலோவிலிருந்து மேற்கு வெர்ஜினியாவின் மார்ஷல் கவுண்டியில் உள்ள பிரபஹுபதாஸ் பேலஸ் ஆஃப் கோல்டுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
காவல்துறையின் முயற்சி
பர்கர் கிங் உணவகத்தின் கண்காணிப்பு கேமராவில் காணாமல் போனவர்களில் இருவர் உணவகத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.
அவர்களின் கிரெடிட் கார்டு கடைசி முறையாக அங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, பென்சில்வேனியாவில் உள்ள I-79 நெடுஞ்சாலையில், பிற்பகல் 2:45 மணி அளவில் தெற்கு நோக்கிச் சென்ற அவர்களின் காரை உரிமத் தகடு ரீடர் கண்டறிந்துள்ளது.
மார்ஷல் கவுண்டி ஷெரீப் மைக் டஃபர்டி கூறுகையில், "குடும்பத்தினர் முதலில் பிட்ஸ்பர்க் நகரத்துக்கும், பிறகு மேற்கு வெர்ஜினியாவின் மவுண்ட்ஸ்வில்லிக்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். சில தகவல்கள் கிடைத்திருந்தாலும், காணாமல் போன நான்கு பேரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்றார்.
மேற்கு வெர்ஜினியாவின் உள்ளூர் சாலைகளில் துணை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கார் மற்றும் காணாமல் போனவர்களின் விவரங்கள் தேசிய அளவிலான காணாமல் போனவர்கள் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
காணாமல் போனவர்கள் குறித்த அறிக்கை நியூயார்க்கின் பஃபேலோவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியக் கலாச்சாரம் மற்றும் கலைகள் கவுன்சில் (CHAI) சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களுடன் கூடிய போஸ்டர்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதுகுறித்த தகவல்கள் தெரிந்தால், மார்ஷல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண்: 304-843-5422.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |