140 ஆயிரம் டன் உணவு தானியம்: ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி விரைந்த 4 சரக்கு கப்பல்கள்
140 ஆயிரம் டன் உணவு தானியங்களுடன் வெளியேறியது 4 சரக்கு கப்பல்கள்.
1.1 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள் ஏற்கனவே ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி வைப்பு.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உணவு வழங்குவதற்காக 4 தானிய சரக்கு கப்பல்கள் உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறியதாக அந்த நாட்டின் உள்கட்டமைப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையினால் உக்ரைனிய தானிய ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டது.
EPA
இதையடுத்து உலகளவில் ஏற்பட்ட உணவு தானிய நெருக்கடி மற்றும் விலையேற்றத்தை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை, துருக்கி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் உக்ரைன் தானியம் ஒடேசா(Odesa) துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட தொடங்கியது.
ஜூலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவுடன் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு, சுமார் 7.5 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியம் உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு உணவு வழங்குவதற்காக சுமார் 140 ஆயிரம் டன் உணவு தானியங்களை ஏற்றிக் கொண்டு மேலும் நான்கு சரக்கு கப்பல்கள் உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
1.1 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள் ஏற்கனவே உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ராணியை பதவி நீக்க இளவரசர் சார்லஸ் சதி: தி கிரவுன் தொடரை புறக்கணிக்க மன்னரின் நண்பர்கள் அழைப்பு
இதற்கிடையில் ஐக்கிய நாடுகளின் ஆதரவு ஒப்பந்தம் அடுத்த மாதம் காலாவதியாகிறது, ஆனால் இன்னும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தானியம் அனுப்பப்பட வேண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகள் நம்பும் நிலையில், ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா ஒத்துழைக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.