450 மில்லியன் பிட்காயின் கொள்ளை! சிங்கப்பூர் இளைஞரின் ஆடம்பர வாழ்க்கை அம்பலம்
சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முதலீட்டாளர் ஒருவரை ஏமாற்றி அவரின் பிட்காயின்களை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிலையில் அவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிட்காயின் மோசடி
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பிட்காயின் முதலீட்டாளர் ஒருவரை ஏமாற்றி, அவரது கணக்கிலிருந்து சுமார் 450 மில்லியன் டொலர் மதிப்புள்ள 4,100 பிட்காயின்களை சிங்கப்பூரைச் சேர்ந்த 20 வயது மெலோனி லாம் மற்றும் அவரது நண்பர் ஜீன்டீல் செரானோ ஆகியோர் தங்கள் சொந்த கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.
இந்த கிரிப்டோகரன்சி திருட்டின் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு அவர்கள் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைதுக்கு முன் மிரள வைக்கும் செலவுகள்
மெலோனி லாம் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, அதாவது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக, மியாமி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள இரவு கேளிக்கை விடுதிகளில் ஒரு நாளைக்கு சுமார் 5 லட்சம் டொலர்கள் வரை செலவு செய்துள்ளார்.
குறிப்பாக, 48 ஷாம்பெயின் பாட்டில்களுக்காக 72,000 டொலரும், 55 பாட்டில் கிரே கூஸ் ஓட்கா வாங்குவதற்கு 38,500 டொலரும் செலவழித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மாடல் அழகிகளுக்கு 20,000 டொலர் மதிப்புள்ள ஹெர்ம்ஸ் பிர்கின் பைகளை வாங்கி பரிசளித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் ரூபாயாகும்.
சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை
லாம் மற்றும் செரானோ இருவரும் லம்போர்கினி, போர்ஷே, பெராரி உள்ளிட்ட 30 சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளனர்.
இதில், பகானி ஹுய்ரா காரின் மதிப்பு மட்டும் 38 மில்லியன் டொலர் (சுமார் 33 கோடி ரூபாய்). அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை கண்காணித்து வந்த அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், அவர்களை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாஷிங்டன் நீதிமன்றத்தில் லாம் மீது 230 மில்லியன் டொலர் மதிப்புள்ள பிட்காயினை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 6 ஆம் திகதி நடைபெற உள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |