460 பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு அபாயம் - அச்சத்தில் பொதுமக்கள்
தென்னிந்திய மாநிலமான கேரளாவில் கனமழையால் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டதை அடுத்து பலர் உயிரிழந்த நிலையில், தற்போது பல பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் செவ்வாய்கிழமை அதிகாலை பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் கனமழை மற்றும் ஒரு முக்கியமான பாலம் இடிந்து விழுந்ததால் தடைப்பட்டுள்ளது.
அவசரகால சேவைகள் இன்னும் சென்றடைய முடியாத பகுதிகளில் சுமார் 100 பேர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 460 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு காணப்படுகிறது.
கேரள மீன்வளம்-கடல் அறிவியல் பல்கலைக்கழக ஆய்வின்படி 32 இடங்களில் 30 சதவீதத்திற்கு அதிகமாகவும், 76 இடங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகவும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
வயநாட்டில் வைத்திரி, தொண்டர்நாடு பொழுதானா, திருநெல்லி, வெள்ளமுண்டா, தரியோடு, முப்பைநாடு, பதிஞ்சசரதாரா உள்ளிட்ட பகுதிகளிலும் இடுக்கியில் கொக்கையார், மறையூர் உள்பட 20 இடங்களிலும், மலப்புரத்தில் அமரம்பலம், கருளை, சோக்காடு, கருவரக்குண்டு உள்ளிட்ட இடங்களிலும், பாலக்காட்டில் 3 இடங்களிலும், பத்தினம்திட்டா மாவட்டத்தில் அருவாப்புலம், சீத்தாத்தோடு, சித்தார் ஆகிய இடங்களிலும் நிலச்சரிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |