ரூ.5 கோடி கேட்டு ரிங்கு சிங்கிற்கு கொலை மிரட்டல் - பின்னணியில் நிழல் உலக தாதா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருப்பவர் ரிங்கு சிங். மேலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

கடந்த ஜூன் 8 ஆம் திகதி, இவருக்கு சமாஜ்வாதி எம்.பி பிரியா சரோஜ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ரிங்கு சிங்கிற்கு கொலை மிரட்டல்
இந்நிலையில், அவருக்கு பணம் கேட்டு இந்தியாவின் பிரபல தாதா கும்பலில் இருந்து மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், நவீத் என்பவர் தன்னை ரிங்கு சிங்குவின் ரசிகராக அறிமுகப்படுத்திக்கொண்டு அவரிடம் பணம் கேட்டு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏப்ரல் 5 ஆம் திகதி அவர் அனுப்பிய மின்னஞ்சலில், "நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன், நீங்கள் KKR அணிக்காக விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ரிங்கு சார், உங்கள் அயராத முயற்சிகளைத் தொடருங்கள் என்று நம்புகிறேன். ஒரு நாள் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் உச்சத்தை அடைவீர்கள். ஒரு வேண்டுகோள், நீங்கள் எனக்கு நிதி உதவி செய்தால், அல்லாஹ் உங்களை மேலும் ஆசீர்வதிப்பாராக, இன்ஷா அல்லாஹ்." என குறிப்பிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் 9 ஆம் திகதி அனுப்பிய மற்றொரு மின்னஞ்சலில், "எனக்கு ரூ.5 கோடி வேண்டும். நான் நேரத்தையும் இடத்தையும் ஏற்பாடு செய்கிறேன். தயவுசெய்து உங்கள் உறுதிப்படுத்தலை அனுப்பவும்." என குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக ஏப்ரல் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், "நினைவூட்டல்! டி-கம்பெனி" என குறிப்பிட்டுள்ளார்.
டி கம்பெனி
இந்த மிரட்டல் தொடர்பாக முகமது தில்ஷாத் மற்றும் முகமது நவீத் ஆகிய இருவர் மேற்கிந்தியத் தீவுகளில் கைது செய்யப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் ரிங்கு சிங்குவை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டு மிரட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே, இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக்கியின் மகன் ஜீஷன் சித்திக்கிடமிருந்து ரூ.10 கோடி கேட்டு மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

டி-கம்பெனி(D-Company) என்பது இந்தியாவின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின்(Dawood Ibrahim) தலைமையிலான குற்ற பின்னணி கொண்ட கும்பலாகும்.
மிரட்டி பணம் பறித்தல் , கடத்தல் , மோசடி , போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கிறது. மும்பையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த கும்பல், 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பு உடன் தொடர்புடையது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        