ஆம்ஸ்டர்டாமில் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்!
ஆம்ஸ்டர்டாமில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக்குத்து தாக்குதல்
ஆம்ஸ்டர்டாம் நகரின் மையப்பகுதியில் உள்ள டாம் சதுக்கத்திற்கு அருகில், வியாழக்கிழமை மதியம் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
டச்சு காவல்துறையின் தகவலின்படி, இந்த தாக்குதல்கள் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில், செயிண்ட் நிக்கோலஸ்ட்ராட் அருகே நடந்துள்ளது.
இந்த தாக்குதலில், 67 வயது அமெரிக்க பெண், 69 வயது அமெரிக்க ஆண், போலந்தை சேர்ந்த 26 வயது ஆண், பெல்ஜியத்தை சேர்ந்த 73 வயது பெண், ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த 19 வயது பெண் என பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டனர்.
சந்தேக நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள கிராவென்ஸ்ட்ராட் பகுதியில் பொதுமக்களில் ஒருவர் சந்தேக நபரை மடக்கி பிடித்தார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த தாக்குதலின் நோக்கத்தை அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் ஒரு தற்செயலான வன்முறை செயலாக இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
திடீர் அவசரநிலைக்கு பதிலளிக்கும் விதமாக, அந்த பகுதி உடனடியாக தடைசெய்யப்பட்டது. அத்துடன் பல ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |