தமிழ்நாட்டில் ஒரே மதிப்பெண் பெற்ற 5 இரட்டையர்கள்
தமிழ்நாட்டில் நேற்று வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில், ஐந்து இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத்தேர்வு
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது.
இதனை 04,36,120 மாணவர்களும், 04,35,119 மாணவிகளும் என மொத்தம் 08,71,239 பேர் எழுதினர். நேற்றைய தினம் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதன் தேர்ச்சி சதவீதம் 93.80 ஆகும்.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் சேலம், மதுரை, கோவை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றனர்.
ஒரே மதிப்பெண்கள்
மதுரைச் சேர்ந்த மாயாஸ்ரீ, மகாஸ்ரீ ஆகிய இரட்டை சகோதரிகள் 475 மதிப்பெண்கள் எடுத்தனர். மதுரை அருகேயுள்ள கீழையூரைச் சேர்ந்த ராமநாதன், லட்சுமணன் சகோதரர்கள் ஐந்து பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாக 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த கவிதா, கனிகா இரட்டை சகோதரிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, ஒன்றாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடியின் கோவில்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன், செந்தில்நாதன் இரட்டை சகோதரர்கள் 457 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த இதழ்யா மற்றும் இதழ்யாதினி சகோதரிகள் 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |