சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி
புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து கடலில் தூக்கி எறிந்துள்ளனர் ஆட்கடத்தல்காரர்கள்.
சித்திரவதை செய்து கடலில் தூக்கி எறிந்த ஆட்கடத்தல்காரர்கள்
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகல் என்னும் நாட்டிலிருந்து ஸ்பெயினுக்குச் சொந்தமான கானரி தீவுகள் நோக்கி புலம்பெயர்வோர் படகு ஒன்று புறப்பட்டுள்ளது.
அதில் சுமார் 300 பேர் பயணித்துள்ளார்கள். செனகலுக்கும் கானரி தீவுகளுக்கும் இடையிலான தூரம், சுமார் 1,597 கிலோமீற்றர் ஆகும்.
கடினமான அந்த பயணத்தின்போது அவ்வப்போது படகின் எஞ்சின் செயலிழந்துள்ளது. உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையும், மோசமான வானிலையும் பயணத்தை பாதிக்க, அந்த புலம்பெயர்வோரை அழைத்துவந்த ஆட்கடத்தல்காரர்கள், படகிலிருந்த சிலரை சூனியக்கார்கள் என குற்றம் சாட்டி, அவர்களால்தான் இத்தனை பிரச்சினைகளும் என்று கூறி, பலரை சித்திரவதை செய்துள்ளார்கள்.
சிலரை சுட்டுக்கொன்றுள்ளார்கள், சிலரை கடலில் வீசியுள்ளார்கள், கடலில் தவறி விழுந்த சிலரை காப்பாற்ற மறுத்துள்ளார்கள்.
அவ்வகையில், சுமார் 50 பேர் உயிரிழந்ததாக படகில் வந்தவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆப்பிரிக்கக் கரையில் அந்த படகை மீட்ட ஸ்பெயின் அதிகாரிகள் அவர்களை கானரி தீவுக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆட்கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 19 பேரை ஸ்பெயின் அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |