தரைமட்டமாக்கப்பட்ட மரியுபோல் நகரம்; 5000-க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்று குவித்த ரஷ்யா
உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் 210 குழந்தைகள் உட்பட 5,000-க்கும் அதிகமான அப்பாவி மக்களை ரஷ்ய படையினர் கொன்று குவித்துள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் போர் 43-வது நாளை எட்டியுள்ளது. பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் அங்கு குண்டு மழை பொழிந்துவருகிறது. மாரியுபோல் நகரத்தில் இதுவரை 210 குழந்தைகள் உட்பட 5100 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நகர மேயர் Vadym Boichenko தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மாரியுபோலில் நேற்று ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 50 பேர் உயிருடன் எரிந்தனர். இந்த மக்கள் அனைவரும் மனிதாபிமான உதவியை நாடுவதற்காக ஒரே இடத்தில் கூடியிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான குடிமக்கள் இன்னும் இங்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் என அனைத்து கட்டிடங்களும் ரொக்கெட் தாக்குதலில் தூள்தூளாகிவிட்டன. நகரின் உள்கட்டமைப்புகளில் 90% க்கும் அதிகமானவை அழிக்கப்பட்டுள்ளன என்று நகர மேயர் Vadym Boichenko கூறினார்.
நகரின் மனிதாபிமான நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், 1.60 மில்லியன் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒளி, தகவல் தொடர்பு, மருந்து அல்லது தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்றும் பிரித்தானியாவின் இராணுவ உளவுத்துறை புதன்கிழமை கூறியது.
போருக்கு முன் மரியுபோலில் 430,000 மக்கள் இருந்த நிலையில், தற்போது இன்னும் 160,000 பேர் அங்கு சிக்கியிருப்பதாக பிரித்தானியாவின் இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மரியுபோல் நகரம்- கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்ய படையெடுப்புக்கு முன் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம்
மரியுபோல் நகரம்- ரஷ்ய படையெடுப்புக்கு பின் கடந்த செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம்






