அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி மீது தாக்குதல்: தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சி
அயர்லாந்தில் தொடர்ச்சியாக இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல்களும் இனவெறித்தாக்குதல்களும் நடத்தப்படும் விடயம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்திய வம்சாவளி சிறுமி மீது தாக்குதல்
திங்கட்கிழமையன்று, இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நியா நவீன் (6) என்னும் சிறுமி, அயர்லாந்திலுள்ள Waterford என்னுமிடத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்னாலேயே அயர்லாந்து நாட்டுப் பையன்களால் தாக்கப்பட்டுள்ளாள்.
சில நாட்களுக்கு முன்பும் நியாவை அயர்லாந்து நாட்டுச் சிறுவர்கள் சிலர் இன ரீதியாக தாக்கியுள்ளார்கள்.
தன் மகளைத் தாக்கியவர்கள் 12 முதல் 14 வயதுடையவர்கள் என்கிறார் அந்தச் சிறுமியின் தாயான அனுபா அச்சுதன்.
அவளை அவர்கள் கெட்ட வார்த்தையால் திட்டியதுடன், உன் நாட்டுக்கே திரும்பிப் போ என்றும் அவர்கள் கூறியதாக தெரிவிக்கும் அனுபா, அவர்கள், தன் மகளை அந்தரங்க உறுப்பில் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
எட்டு ஆண்டுகளாக அயர்லாந்தில் வாழும் நியாவின் பெற்றோர் அயர்லாந்து குடியுரிமை பெற்றவர்கள், அவர்களுடைய பிள்ளைகள் அயர்லாந்தில் பிறந்தவர்கள்.
கடந்த சில வாரங்களாகவே, இந்திய வம்சாவளியினர் மீது பதின்ம வயது அயர்லாந்துச் சிறுவர்கள் தாக்குதல் நடத்துவது தொடரும் நிலையில், அயர்லாந்தில் வாழும் இந்திய வம்சாவளியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |