நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய கொடூர தாக்குதல்: 62 பேர் வரை உயிரிழப்பு
வடக்கு நைஜீரியாவில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் குறைந்தது 62 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் கொடூர தாக்குதல்
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள கிராமப்புற பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய கொடூரமான தாக்குதலில் குறைந்தது 62 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தராபா மாகாணத்தில் உள்ள கரீம் லாமிடோ என்ற உள்ளாட்சிக்கு உட்பட்ட பின்னாரி என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த வன்முறை தாக்குதலில் மேலும் 52 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
அந்நாட்டின் தேசிய அவசர கால மேலாண்மை முகமை மற்றும் மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட தகவலில், கொடூர தாக்குதலுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு தப்பியோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நதியில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 52 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதில் 15 பேரின் சடலங்கள் பெனுவே நதியில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தராபா மாநில காவல் செய்தித் தொடர்பாளர் விக்டர் மஷெலிசா தெரிவித்துள்ளார்.
தாக்குதல் கும்பல், மனித உயிர்களை கொன்று குவித்ததுடன் மட்டுமல்லாமல் வீடுகள் கடைகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் உணவு தானிய கிடங்கு ஆகியவற்றையும் தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.