700 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை: 10 நாட்களாக தொடரும் மீட்புபணி
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 700 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை கடந்த 10 நாட்களாக மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், 160 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட சுரங்கம் திசை மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் திகதி ராஜஸ்தானின் கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள 700 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 3 வயது பெண் குழந்தையொன்று தவறி விழுந்தது.
விவரம் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.
ஆனால் தோல்வியில் முடியவே, குறித்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 160 அடி ஆழத்திற்கு குழித்தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. 28ம் திகதி பணிகள் முடிக்கப்பட்டு, குழந்தை இருக்கும் திசை நோக்கி 8 அடிக்கு சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடுமையாக பாறைகள் அமைந்திருக்கும் பகுதி என்பதால் சிரமத்துடன் செய்து முடிக்கப்பட்ட பணியும் திசை மாறி சென்று விட்டதாக தெரிகிறது.
அதாவது குழந்தை இருக்கும் திசை அல்லாமல் வேறு திசையில் சென்றுள்ளதாகவும், குழந்தை இருக்கும் பகுதியை கணிக்க முடியவில்லை எனவும் அம்மாவட்ட ஆட்சியர் கல்பனா அகர்வால் தெரிவித்துள்ளார்.
23ம் திகதி குழந்தை தவறி விழுந்த நிலையில், 24ம் திகதியே குழந்தையின் உடலில் அசைவுகள் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், மீட்பு நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் முதல் நாளே சரியான மீட்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.