தேர்தல் முடிவிற்கு எதிராக வெடித்த வன்முறை - 700 பேர் உயிரிழப்பு
தான்சானியா தேர்தல் முடிவுக்கு எதிரான வன்முறையில் 700 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான்சானியா ஜனாதிபதி தேர்தல்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில், கடந்த அக்டோபர் 29 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
இதில் பிரதான எதிர்க்கட்சியான ACT–Wazalendo கட்சி வேட்பாளர் லுஹாகா ம்பினா(, வேட்புமனு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதாக கூறி அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதில், ஆளும் சாமா சா மாபிந்துசி (CCM) கட்சியை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் சாமியா சுலுஹு ஹாசன்(Samia Suluhu Hassan), 97.95% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற தொடங்கியது.
700 பேர் உயிரிழப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள், சாலைகளில் டயர்களை எரிக்க தொடங்கினர். இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றபோது, இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்து போராட்டம் வன்முறையாக மாறியது.

இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவத்தினர் சாலைகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வன்முறையில், 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்க்கட்சியான சடேமா அச்சம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |