ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் தடைப்பட்ட உணவு தானிய ஏற்றுமதி: பல டன்கள் விவசாய பொருட்கள் வெளியேற்றம்
ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனைகளை தொடர்ந்து உணவு தானிய ஏற்றுமதி இடைநிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் மீண்டும் உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் துறைமுகங்களை விட்டு வெளியேற தொடங்கியுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட தானிய ஏற்றுமதி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, பல நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து ஐ.நா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கான உணவு தானிய ஏற்றுமதி தொடங்கப்பட்டது.
இந்த முன்முயற்சியின் கீழ், உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் படி, உணவுடன் கூடிய 550 கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து இதுவரை வெளியேறியுள்ளன.
Grains-உணவு தானியம்(GETTY)
இந்த ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியாகி பேச்சுவார்த்தைகளுக்கு பின் மீண்டும் தொடரப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், மின்வெட்டு பிரச்சனைகள் ஏற்பட்டு உணவு தானிய ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டது.
இதனால் ஒடேசாவின் கருங்கடல் துறைமுகம் ஞாயிற்றுக்கிழமை இயங்கவில்லை, அதே நேரத்தில் சோர்னோமோர்ஸ்க் மற்றும் பிவ்டென்னி துறைமுகங்கள் ஓரளவு மட்டுமே திறந்திருந்தன.
மீண்டும் தொடங்கிய தானிய ஏற்றுமதி
ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர், தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் மீண்டும் உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களை விட்டு வெளியேற தொடங்கியுள்ளது.
இன்று மட்டும் உக்ரைனில் இருந்து சுமார் 238,600 டன்கள் விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, மேலும் 690,000 டன்கள் மற்ற 23 கப்பல்களில் ஏற்றப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.