காபூலில் இருந்த இலங்கையர்கள் எந்த நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்? இன்னும் எத்தனை பேர்? வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களில் எட்டு பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள், நேற்று முன் தினம் காபூல் நகரில் நுழைந்தவுடன் அங்கிருக்கும் மக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஏராளமான வெளிநாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசாங்கம், தனி இராணுவ விமானத்தை அனுப்பி அழைத்து வருகிறது. அந்த வகையில், ஆப்கானில் இருக்கும் இலங்கையர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது காபூலில் இருந்து இலங்கையர்கள் 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதில் 3 பேர் பிரித்தானியாவிற்கும், 5 பேர் கத்தார் நாட்டிற்கும் சென்றுள்ளதாக வெளிவிவகார செயலாளர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) பேராசிரியர் Jayantha Colombage கூறியுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் 60 இலங்கையர்கள் இருப்பதாகவும், அங்கிருக்கும் இலங்கையர்கள் மற்ற நாட்டவர்களுடன் சேர்ந்து வெளியேறுவதற்கு, பல நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், காபூலில் இருக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.