திடீரென இடிந்து விழுந்த பாலம்; ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - அதிகரிக்கும் உயிரிழப்பு
பாலம் இடிந்து விழுந்ததில், ஆற்றின் உள்ளே வாகனங்கள் விழுந்து, 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிந்து விழுந்த பாலம்
குஜராத்தின் வதோதராவில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் 40 வருட பழமையான பாலம் ஒன்று இன்று காலை 7;30 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது.
இதில், பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், ஒரு பிக்அப் வேன் உள்ளிட்ட சில வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளது.
தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆற்றில் விழுந்த வாகனங்கள் மற்றும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆற்றில் சிலர் அடித்து செல்லப்பட்டிருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சவுராஷ்டிரா மற்றும் மத்திய குஜராத், ஆனந்த் மற்றும் பத்ராவை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்துள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
விசாரணை
ஏற்கனவே இந்தப் பாலத்தின் நிலை குறித்து எச்சரித்து புதிய பாலம் கட்டி தருமாறு உள்ளூர் எம்எல்ஏ சைதன்யா சிங் ஜாலா கோரிக்கை வைத்திருந்தார். இருப்பினும், பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. ரூ.212 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து பேசிய குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல், "இந்த பாலம் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும், அதன் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை விசாரிக்க தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்ப முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |