விபத்து நடந்ததை வேடிக்கை பார்த்த 9 பேர் பரிதாப மரணம்! கார் டிரைவர் கைது
இந்திய மாநிலம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் 9 பேரை காரை ஏற்றி கொன்ற ஓட்டுநரை பொலிசார் கைது செய்தனர்.
விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் பாலத்தில் நேற்று முன்தினம் அதிகாலை இரு வாகனங்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு வாகனத்தின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
பின்பு, விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், உள்ளூர் போக்குவரத்து பொலிசாரும், ஊர்க்காவல் படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். அப்போது, என்ன நடந்தது என்று பார்க்கவும், மீட்பு பணியில் ஈடுபட்டும் மக்கள் கூடினர்.
அப்போது, அதிவேகமாக வந்த ஜாகுவார் கார் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிகிச்சையின் போது 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 13 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கார் ஓட்டுநர் கைது
இந்த விபத்து தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விரைவான நடவடிக்கையாக அகமதாபாத் பொலிசார் இஸ்கான் பாலத்தில் 9 பேரை நசுக்கி கொன்ற கார் டிரைவர் தத்யா படேலை கைது செய்தனர்.
இதனையடுத்து, குஜராத் காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட தத்யா படேல் மற்றும் அவரது தந்தை பிரக்னேஷ் ஆகியோரை விபத்து நடந்த இடத்திற்கு அழைத்து வந்தது.
மேலும், இது தொடர்பான வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்ட தத்யா படேல் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்பது காணப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |