கூட்டமாக நின்றவர்கள் மீது சொகுசு கார் மோதி 9 பேர் உயிரிழப்பு! 13 பேர் காயம்
இந்திய மாநிலம் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் ஏற்கனவே விபத்து நடந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
கார் மோதி 9 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் பாலத்தில் அதிகாலை 1 மணியளவில் இரு வாகனங்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு வாகனத்தின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
பின்பு, விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், உள்ளூர் போக்குவரத்து பொலிசாரும், ஊர்க்காவல் படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். அப்போது, என்ன நடந்தது என்று பார்க்கவும், மீட்பு பணியில் ஈடுபட்டும் மக்கள் கூடினர்.
இந்நிலையில், அதிவேகமாக வந்த ஜாகுவார் கார் அங்கு கூடியிருந்த கூட்டத்தின் மீது மோதியது. இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிகிச்சையின் போது 4 பேர் உயிரிழந்தனர்.
ஒரு காவலர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 13 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை முடிந்ததும் கார் ஓட்டுநர் கைது செய்யப்படுவார்
இந்த விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தத்யா படேலும் காயமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க காவல்துறை தங்களால் இயன்றவரை முயற்சி செய்யும் என்றும் டிசிபி டிராஃபிக் வெஸ்ட் நிதா தேசாய் நீதா தேசாய் தெரிவித்தார்.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகத் தெரியவில்லை என்றும், ஜாகுவார் காரின் வேகம் மிக அதிகமாக இருந்தது என்றும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, கார் டிரைவர் தத்யா படேல் சிகிச்சையில் இருப்பதால், டாக்டர்கள் அனுமதி அளித்தவுடன் அவரைக் கைது செய்வோம் என்று டிசிபி டிராஃபிக் வெஸ்ட் நிதா தேசாய் கூறியுள்ளார்.
இஸ்கான் பாலத்தின் கீழ் உள்ள குறுக்கு சாலையானது, இரவு நேரங்களில் இளைஞர்கள் தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக கூடிவரும் ஒரு பிரபலமான இடமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |