பிலிப்பைன்ஸில் இடிந்து விழுந்த 9 மாடி கட்டிடம்: டஜன் கணக்கான தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு
பிலிப்பைன்ஸில் புதிதாக கட்டப்பட்ட 9 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இடிந்து விழுந்த 9 மாடி கட்டிடம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிபாகோ பகுதியில் 9 மாடி ஹோட்டல் கட்டுமானம் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பந்தப்பட்ட பகுதியில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது
அப்போது காற்று மற்றும் மழையின் பாதிப்புகளை தாங்க முடியாமல் பலத்த சத்தத்துடன் ஒட்டுமொத்த கட்டிடமும் சரிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த சம்பவத்தின் போது கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேஸ்திரி உள்பட 22 தொழிலாளர்கள் கட்டிடத்தை விட்டு தப்பியோடி உயிர் பிழைத்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்த தங்கும் முகாம்களில் 30 முதல் 40 தொழிலாளர்கள் உறங்கி கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்த போது அருகில் இருந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும், அதனால் மீட்பு படையினருக்கு மின்சார அதிர்ச்சி ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சாரமானது தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |