ஒரே நேரத்தில் 2 கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்! எந்த நாட்டில் தெரியுமா?
பெல்ஜியம் நாட்டில் 90 வயது பெண் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பெண் தனியாக வசித்து வந்த நிலையில், வீட்டிலேயே நர்ஸிங் கவனிப்பைப் பெற்று வந்துள்ளார். அவர் கோவிட் தடுப்பூசி எதுவும் போடவில்லை.
இந்த நிலையில், மார்ச் மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அலஸ்ட்டில் (Aalst) நகரத்தில் உள்ள ஓ.எல்.வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியானது.
ஆரம்பத்தில் அவரது ஆக்ஸிஜன் அளவு நன்றாக இருந்தபோதிலும், அவரது நிலை விரைவாக மோசமடைந்தது. ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார்.
அவர் எந்த வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதை மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்தபோது, பிரித்தானியாவில் தோன்றிய Alpha மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட Beta ஆகிய இரண்டு வைரஸ்களும் அவரது உடம்பில் இருந்ததைக் கண்டறிந்தனர்.
"இந்த இரண்டு வகைகளும் அந்த நேரத்தில் பெல்ஜியத்தில் புழக்கத்தில் இருந்தன, எனவே அந்த பெண்மணி இரண்டு வெவ்வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய OLV மருத்துவமனையைச் சேர்ந்த மூலக்கூறு உயிரியலாளர் அன்னே வான்கீர்பெர்கன் (Anne Vankeerberghen) கூறினார்.
இந்த ஆய்வு, எந்த ஒரு மருத்துவ இதழில் வெளியிடுவதற்காகவும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது இது மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய்களின் ஐரோப்பிய காங்கிரஸில் வழங்கப்படுகிறது.
இதேபோல், ஜனவரி மாதம் பிரேசிலில் விஞ்ஞானிகள் இரண்டு பேர் ஒரே நேரத்தில் கொரோனா வைரஸின் இரண்டு வெவ்வேறு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர், ஆனால் இந்த ஆய்வும் இன்னும் எந்த ஒரு அறிவியல் இதழில் வெளியிடப்படவில்லை.
இதுபோன்று, ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வைரஸ் தொற்று ஏற்படுவது குறித்து ஆய்வுகள் மேம்படுத்தப்படவுள்ளன.