நியூ ஜெர்சி கடற்கரையில் புதையல்! 90 ஆண்டு கால மில்லியன் டொலர் விஸ்கி பாட்டில்கள் கண்டுபிடிப்பு!
நியூ ஜெர்சியின் மார்கேட் பியர் கடற்கரையில் அதிர்ஷ்டவசமாக கண்டுபிடிக்கப்பட்ட 90 ஆண்டுகள் பழமையான 11 விஸ்கி பாட்டில்கள், அமெரிக்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளன.
இந்த விஸ்கி பாட்டில்கள், "லிங்கன் இன்" (Lincoln Inn) பிராண்ட் விஸ்கி, 1930-1940 காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டது.
இந்த அரிய கண்டுபிடிப்பு, மதுவிலக்கு காலத்தில் அமெரிக்காவில் நடந்த சட்டவிரோத மது கடத்தல் மற்றும் ஜெர்சி ஷோரின் வரலாற்றை நமக்கு நினைவூட்டுகிறது.
கடற்கரையில் புதையல்
அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரியான ஆஸ்டின் கொன்டெஜியாகோமோ, தனது செல்ல நாயுடன் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, அவரது நாய் வழக்கத்திற்கு மாறாக மண்ணில் புதைந்திருந்த ஏதோ ஒரு வித்தியாசமான பொருளை கண்டுபிடித்துள்ளது.
சந்தேகமடைந்த ஆஸ்டின், அந்த பொருளை தோண்டி எடுத்தபோது, அது 11 விஸ்கி பாட்டில்கள் என்பது தெரியவந்தது.
வரலாற்றுப் பின்னணி
அமெரிக்காவில் 1920 முதல் 1933 வரை அமெரிக்காவில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், சிலர் சட்டவிரோதமாக மதுபானங்களை அமெரிக்காவிற்கு கடத்தினர். அவர்கள் "பூட்லெக்கர்கள்" (Bootleggers) என்று அழைக்கப்பட்டனர்.
கனடாவிலிருந்து கடத்தி வரும் மதுபாட்டில்களை நியூ ஜெர்சியின் ஜெர்சி ஷோர் (Jersey Shore) பகுதியில் பதுக்கி வைத்தனர். இந்த ஜெர்சி ஷோர் மதுபான கடத்தலுக்கு பிரபலமான இடமாக இருந்தது.
இந்த ஜெர்சி ஷோர் அருகேதான் மார்கேட் பியர் கடற்கரை அமைந்துள்ளது.
கடத்தலின்போது, கடல் சீற்றம் காரணமாக சில பாட்டில்கள் கடலில் விழுந்திருக்கலாம். அல்லது அமெரிக்க பொலிஸிடம் இருந்து தப்பிக்க கடலில் வீசப்பட்டிருக்கலாம்.
அவை காலப்போக்கில் கடற்கரையில் மணலுடன் மணலாக புதைந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விஸ்கியின் தரம் மற்றும் பாதுகாப்பு
கண்டுபிடிக்கப்பட்ட 11 பாட்டில்களின் மூடிகளும் சீல் செய்யப்பட்டிருப்பதால், கடல் நீர் உள்ளே செல்ல வாய்ப்பில்லை.
கடலின் வெப்பநிலை பொதுவாக 70 டிகிரி செல்சியஸுக்குள் இருப்பதால், விஸ்கி கெட்டு போக வாய்ப்பில்லை. இருப்பினும், இந்த விஸ்கி பாட்டில்களை கண்டுபிடித்த ஆஸ்டின் அவற்றை குடிக்க விரும்பவில்லை.
பொதுவாக, இதுபோன்ற பழமையான விஸ்கி பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவை அருந்தப்படுவதில்லை. மாறாக, அவை பழங்கால பொக்கிஷமாக பாதுகாக்கப்படும்.
மில்லியன் டொலர் மதிப்பு: ஏன் இவ்வளவு விலை?
இந்த அரிய விஸ்கி பாட்டில்கள் சுமார் 1 மில்லியன் டொலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.72 கோடி) விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், இந்த விஸ்கி பாட்டில்களின் பழமை மற்றும் அவை தயாரிக்கப்பட்ட காலகட்டம். மேலும், லிங்கன் இன் (Lincoln Inn) பிராண்ட் விஸ்கி தற்போது சந்தையில் கிடைப்பதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |