400 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் கல்வீச்சு திருவிழா - 934 பேர் காயம்; பின்னணியில் காதல் கதை
400 ஆண்டுகளாக நடைபெறும் கல்வீச்சு திருவிழாவில் 934 பேர் காயமடைந்துள்ளனர்.
கோட்மார் திருவிழா
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பந்தூர்ணா மாவட்டத்தில், 400 ஆண்டுகளுக்கு மேலாக கல்வீசும் கோட்மார்(Gotmar) திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் நேற்று கோட்மார் திருவிழா நடைபெற்றது.
ஜாம் ஆற்றின் இருபுறத்திலும் உள்ள பாண்டுர்னா மற்றும் சவர்காண் கிராமத்தை சேர்ந்த 60,000 க்கும் அதிகமான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
பாரம்பரியப்படி, சவர்காண் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் காவ்லே என்பவரின் குடும்பத்தினர், காட்டில் இருந்து பலாஸ் மரம் ஒன்றைக் கொண்டு வந்து ஆற்றில் நட்டி, அதன் உச்சத்தில் ஒரு கொடியை ஏற்றினர்.
அங்குள்ள சாண்டி மாத கோவிலில் நடைபெற்ற பூஜைகளுக்கு பின்னர், திருவிழா தொடங்கியது.
பாண்டுர்னா மக்கள் கொடியை அகற்ற முன்னோக்கி வர, சவர்காண் கிராம மக்கள் அவர்கள் மீது கல்வீசி தாக்க தொடங்கினர்.
934 பேர் காயம்
மாறி மாறி கல் வீசி தாக்கியதில், 934 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 10 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, இருவருக்கு கை கால்கள் உடைந்துள்ளது.
கோட்மார் திருவிழாவை முன்னிட்டு அந்த பகுதியில், 58 மருத்துவர்கள், 200 மருத்துவ ஊழியர்கள் அடங்கிய 12 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன.
சட்ட ஒழுங்கை பாதுகாக்க 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலம் திருவிழா கண்காணிக்கப்பட்டது.
இந்த திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர். அருகே உள்ள வீடுகளின் மாடியில் ஏறி இந்த திருவிழாவை பார்வையிட்டனர்.
1995 முதல் 2023 வரை இந்த திருவிழாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பலரும் பார்வை மற்றும் கை கால்களை இழந்துள்ளனர்.
பின்னணியில் காதல் கதை
இந்த திருவிழாவின் பின்னணியில் ஒரு காதல் கதை உள்ளது.
சவர்காண் கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணும், பாண்டுர்னா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ரகசியமாக திருமணம் செய்த கொண்ட இருவரும், அங்கிருந்து ஜாம் ஆற்றின் வழிய அந்த பெண்ணை அழைத்து செல்ல இளைஞர் முயற்சித்துள்ளார்.
ஆற்றில் கழுத்தளவு நீர் சென்றதால், அந்த இளைஞன் பெண்ணை முதுகில் தூக்கிக்கொண்டு சென்றுள்ளான்.
இதனை அறிந்த சவர்காண் கிராம மக்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தகவலறிந்த பாண்டுர்னா கிராம மக்களும் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில், அந்த காதலர்கள் இருவரும் ஆற்றிலே உயிரிழந்துள்ளனர்.
காதலர்கள் இறந்ததை அவமானமாக கருதிய இரு கிராம மக்களும், உடல்களை எடுத்து சாண்டி கோவிலின் முன் வைத்து பூஜை செய்து, பின்னர் தகனம் செய்தனர்.
இதன் நினைவாக 400 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கல் வீசும் கோட்மார் திருவிழா நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |