சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பாய்ந்த குண்டு... பிரான்சில் வேட்டைக்காரர்களால் தொடரும் சர்ச்சை
பிரான்சில் வேட்டைக்காரர்களின் துப்பாக்கிக்குண்டுகள் தவறுதலாக மனிதர்கள் மீது பாயும் விடயங்கள் அதிகரித்துவருகின்றன.
கார் மீது பாய்ந்த துப்பாக்கிக்குண்டு
வடக்கு பிரான்சில் அமைந்துள்ள சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது திடீரென துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததால் காரில் பயணித்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
கடந்த சனிக்கிழமை மதியம், Warluis என்ற கிராமத்தில் கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் நிறைய பயணிகள் இருந்தார்கள். அப்போது திடீரென வேட்டைக்காரர் ஒருவர் சுட்ட துப்பாக்கிக்குண்டு கார் மீது பாய்ந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு காரைத் துளைத்துக்கொண்டு செல்லாததால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
Pic: Robert Nyholm / Shutterstock
தவறான திசையில் சுட்டதால் பாய்ந்த குண்டு
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த Warluis மேயரான Dominique Moret, பொதுவாகவே பல வேட்டைக்காரர்களிடம் ஒரு முரட்டுத்தனம் இருப்பதாகவும், சாலை இருக்கும் திசை நோக்கி ஒருபோதும் சுடக்கூடாது என்பது வேட்டைக்காரர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், அப்பகுதி வேட்டைக்காரர்கள் கூட்டமைப்பின் இயக்குநரான Marc Morgan என்பவரும், வேட்டைக்காரர்கள் விதிகளை மதிக்காததால் தவறு நடந்தது என்றால், அதில் சமரசம் செய்வதற்கு ஒன்றுமில்லை, ஒருவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது திடீரென துப்பாக்கியால் சுடப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார்.
விடயம் என்னெவென்றால், இந்த மாதத்திலேயே இப்படி தவறுதலாக பொதுமக்கள் சுடப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
அதுமட்டுமல்ல, ஒன்று இரண்டு என்றல்ல, குழந்தைகள், பெண்கள், சக வேட்டைக்காரர்கள் என ஏராளமானோர் இதேபோல் தொடர்ந்து தவறுதலாக வேட்டைக்காரர்களால் சுடப்பட்டுவருவதால், இந்த விடயம் பிரான்சில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.