உள்நாட்டு யுத்தத்துக்கு அஞ்சி அகதிகளாக வந்தவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ள முதல் நாடு: ஒரு அச்சுறுத்தும் செய்தி
உள்நாட்டு யுத்தத்துக்கு அஞ்சி சிரியாவிலிருந்து அகதிகளாக வந்த 94 பேரை, மீண்டும் சிரியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது டென்மார்க்.
சிரியா இப்போது பாதுகாப்பான நாடாக உள்ளது என்று கூறி, அகதிகளை தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்ல வலியுறுத்தியுள்ளது டென்மார்க்.
குற்றப்பின்னணி கொண்டவர்கள் சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என முதலில் அறிவித்தது ஜேர்மனிதான், ஆனால், ஐரோப்பாவிலேயே முதல் நாடாக டென்மார்க்தான் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டுக்கு திரும்ப வலியுறுத்தியுள்ளது.
சிரிய தலைநகரான டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகள் பாதுகாப்பானவை, அங்கு சிரிய அகதிகள் திரும்பிச் செல்லலாம் என்று கூறி, 94 சிரிய அகதிகளின் வாழிட உரிமத்தை ரத்து செய்துள்ளது டென்மார்க்.
அகதிகளை திரும்ப அவர்களது நாட்டுக்கே திரும்பிச் செல்லுமாறு டென்மார்க் வலியுறுத்தியுள்ளதேயொழிய, அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றவில்லை. அதற்கு பதில், அவர்கள் நாடு கடத்தல் முகாம்கள் என்னும் முகாம்களில் அடைக்கப்படுவார்கள்.
ஆனால், உயிருக்கு அஞ்சி சிரியாவைவிட்டு ஓடிவந்த நிலையில் இவ்வளவு நாட்கள் சுதந்திரமாக டென்மார்க்கில் வாழ்ந்துவிட்டு, இப்போது சிரிய அகதிகள் மீண்டும் முகாம்களில் அடைக்கப்படும் நிலையில், அவர்கள் வேறு வழியில்லாமல் தாங்களாகவே சிரியாவுக்கே திரும்பிச் சென்றுவிடும் மன நிலைமைக்கு வந்துவிடுவார்கள்.
அதைத்தவிர வேறு வழியில்லை என்கின்றன அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனங்கள். டென்மார்க்கின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Mattias Tesfaye சென்ற மாதம் பேசும்போது, சிரியாவிலிருந்து வரும் அகதிகள் விடயத்தில் ஆரம்பத்திலேயே டென்மார்க் திறந்த மனமும் நேர்மையுமாகவே இருந்து வந்துள்ளது.
சிரிய அகதிகளிடம் நாங்கள் ஆரம்பத்திலேயே அவர்களது வாழிட உரிமம் தற்காலிகமானதுதான் என்பதை தெளிவுபடக் கூறியிருந்தோம்.
இனி பாதுகாப்பு தேவையில்லை என்ற நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களது வாழிட உரிமம் ரத்து செய்யப்படும் என்பதையும் தெரிவித்திருந்தோம் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்தே தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், சிரிய அகதிகள் மீண்டும் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவதால், மீண்டும் ஆண்கள், பெண்கள் மறும் குழந்தைகளின் உயிருக்கு பாயம் ஏற்படுவதோடு, அவர்கள் வேறு எங்காவது பாதுகாப்பு தேடி அலையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கின்றன தொண்டு நிறுவனங்கள்.
அத்துடன், மீதமிருக்கும் சிரிய அகதிகளின் வாழிட உரிமமங்களும் பரிசீலிக்கப்பட உள்ளதால், ஒருவித பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது எனலாம்.


