பெண்கள் உரிமைகள் குறித்து பேச துருக்கி சென்ற பெண் தலைவருக்கு நேர்ந்த அவமரியாதை: வெளியான வீடியோ
பெண்கள் உரிமைகள் முதலான பல விடயங்கள் குறித்து பேசுவதற்காக துருக்கி சென்ற ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Ursula von der Leyen, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான Charles Michel மற்றும் துருக்கி அதிபரான Recep Tayyip Erdogan ஆகியோர், பெண்கள் உரிமை முதலான பல விடயங்கள் குறித்து பேசுவதற்காக, துருக்கி தலைநகர் அங்காராவில் சந்தித்தனர்.
அப்போது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வெளிப்பபடையாக அவமதிக்கப்பட்டதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தையே ஒற்றைப் பெண்ணாக நின்று திறம்பட நிர்வகிக்கும் உர்சுலா, பெண்கள் உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள துருக்கியில், ஒரு பெண் என்பதால் அவமதிக்கப்பட்டுள்ளார்.
இது தற்செயலாக நடந்தது அல்ல, இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு செயல் என்று கூறியுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான Sophie in ´t Veld, இதற்கு முன் துருக்கி அதிபர் எர்டகானை சந்திக்கச் சென்ற தலைவர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில், மூன்று பேருக்கும் சமமாக ஒரே மாதிரியான இருக்கைகள் அருகருகே போடப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சம்பவம் நடந்தபோது அங்கு இருந்த ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான சார்லஸ் இதுகுறித்து எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தது ஏன் எனவும் Sophie கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்தது என்னவென்றால், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான சார்லஸ் மற்றும் துருக்கி அதிபரான எர்டகான் ஆகியோர் பேச்சுவார்த்தைக்காக செல்லும்போது, அங்கே பேச்சு வார்த்தை நடக்கும் இடத்தில், இரண்டு நாற்காலிகள் மட்டுமே அருகருகே போடப்பட்டிருக்க, இரண்டிலும் இரண்டு ஆண்களும் அமர்ந்துகொள்ள, உர்சுலாவுக்கு நாற்காலி போடப்படாததால் கடுப்பானார் அவர்.
வெளிப்படையாகவே, இது என்ன என்பது போல் கைகளை அசைத்து, ம்ஹூம் என்று சத்தம் எழுப்பியும் அவரை யாரும் கண்டுகொள்ளமால் போகவே, வேறு வழியில்லாமல் அருகிலிருந்த சோஃபா ஒன்றில் சென்று அமர்ந்துகொண்டார் உர்சுலா.
ஆனால், இந்த சம்பவம் குறித்து யாரும் வெளியே எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. என்றாலும், இந்த வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பு உருவானது. அதன் பின்னரே அது குறித்து உருசுலாவின் செய்தித்தொடர்பாளர் வாய் திறந்தார்.
உர்சுலாவுக்கு மற்றவர்களுக்கு இணையாக நாற்காலி கொடுக்காததன் மூலம் துருக்கி நெறிமுறைகளை மீறிவிட்டதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இதுபோன்று நடப்பதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு உர்சுலா தன் அணியினரைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரித்தானியாவை பிரெக்சிட் விடயத்தில் கண்களில் விரலை விட்டு ஆட்டிய உர்சுலா, துருக்கியில் நாற்காலில் இல்லாமல் நிற்க வைக்கப்பட்ட வீடியோவைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது!


