மொத்தமாக 40 பேர் படுகொலை... இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள்
சூடானில் மேற்கு டார்பூர் மாநிலத்தில் இன மோதல்களைத் தொடர்ந்து அவசரகால நிலையை அறிவித்துள்ளனர்.
இரண்டு இனக் குழுக்களுக்கு இடையேயான கடும் மோதலில் மொத்தம் 40 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி பாதிப்புக்கு உள்ளான பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அரேபியர்கள் மற்றும் மாசலிட் இன சமூகத்திற்கும் இடையே, சனிக்கிழமை வெடித்த மோதல் சம்பவத்திலேயே 40 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 50கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, திங்கள்கிழமை பிற்பகல் வரை ஹே அல் ஜபல் மற்றும் அல் ஜமாரிக் ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
இரு குழுக்களும் தங்கள் ஆயுத பலத்தை அதிகரித்து வருவதால், அப்பகுதியின் நிலைமை பதட்டமாகவே காணப்படுகிறது.
பாதுகாப்பு நிலைமை மேம்படும் வரை மனிதாபிமான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மனிதாபிமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
ஜனவரியில், மசாலிட் மற்றும் அரபு சமூகங்களுக்கிடையேயான மோதல்கள் குறைந்தது 129 பேரின் மரணத்திற்கும் 108,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்ததற்கும் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.