ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தால் வெடித்த எதிர்ப்பு! பாராளுமன்றம் முற்றுகை..பதவி விலக தயாரென அறிவித்த ஜனாதிபதி
ரஷ்ய நாட்டுடனான முதலீட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், பதவி விலக தயார் என அப்காசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முதலீட்டு ஒப்பந்தம்
அப்காசியா நாட்டில் உள்ள ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு, 8 ஆண்டுகள் வரி மற்றும் சுங்க வரி விலக்கு உட்பட பல்வேறு நன்மைகளை வழங்கும் ரஷ்ய - அப்காசியன் முதலீட்டு ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.
ஆனால், உள்ளூர் பாராளுமன்றத்தில் இதனை அங்கீகரிக்கக் கூடாது என சமீபத்திய நாட்களில் எதிர்ப்புகள் கிளம்பின.
ரஷ்யாவுடனான இந்த முதலீட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து, பிராந்திய பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
Aslan Bzhania
இந்த நிலையில் அப்காசியா ஜனாதிபதி Aslan Bzhania பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பாராளுமன்றத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மற்றும் ஜனாதிபதி நிர்வாக கட்டிடத்திற்கு அருகில் உள்ள வளாகத்தை காலி செய்ய வேண்டும். எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தை காலி செய்தால் பதவி விலக தயார்" என தெரிவித்துள்ளார்.
"தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவும், ராஜினாமா செய்யவும் மற்றும் தேர்தலில் நிற்கவும் நான் தயாராக இருக்கிறேன். மக்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்று சொல்லட்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தமானது, கருங்கடல் கடற்கரையில் ரியல் எஸ்டேட் வாங்குவதற்கு அனுமதிக்கும், குடியிருப்பு சொத்துக்களின் வெளிநாட்டு உரிமையின் மீதான பிராந்தியத்தின் தடையை நீக்க முயல்கிறது.
இதற்கிடையில், ரஷ்யர்களின் பாரம்பரிய விடுமுறை இடமான அப்காசியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று ரஷ்யா வெள்ளிக்கிழமை தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |