பிடுங்கப்பட்ட பற்கள்! காவல் ஆய்வாளர்கள் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கி பொலிஸார் கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் எனப்படும் அதிகாரி பொறுப்பு வகித்து வந்தார்.
அம்பாசமுத்திரம் காவல் துறைக்கு பல்வீர் சிங் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வழங்கப்பட்ட புகாரையடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு!
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உதவி காவல் துறை பணிப்பாளர் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29ம் திகதி மார்ச் மாதம் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் தலைப்புச் செய்தியாக வந்த சம்பவம் தொடர்பாக சபையில் பல உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட விசேட கவன ஈர்ப்புப் பிரேரணைக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
சென்னை மனித உரிமை மீறல் ஆணையகத்தில் விசாரணை!
இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னை மனித உரிமை மீறல் ஆணையகத்தில் நேரடியாக புகார் கொடுத்துள்ளனர்.
காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, பற்களை பிடுங்கி, விரல்களை நசுக்கி கடுமையான குற்றச்சாட்டுகளை மேற்கொண்டுள்ள இளம் ஐபிஎஸ் அதிகாரிக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து புகார்களை ஏற்றுக்கொண்டு, விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து அம்மாவட்ட கண்காணிப்பாளர் சரவணனை இடமாற்றம் செய்துள்ளார்கள்.
மேலும் கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் எனப்படுபவரையும் மற்றுமொரு நபரையும் ஆயுத படைக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
இதனிடையே அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் ராஜகுமாரி,மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றிரவு அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விடயங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.