விஜயகாந்த் சாரை சிரமப்படும் மனிதராக எனக்கு பார்க்கப் பிடித்ததில்லை - நடிகர் பார்த்திபன் உருக்கம்
ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால், ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன் என விஜயகாந்தின் மறைவுக்கு நடிகர் பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகராக மட்டுமின்றி அவர் செய்த நல்ல காரியங்களை கூறி பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜயகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், 'ஒரு எளிமையான, யதார்த்தமான, தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால், ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்....' என கூறியுள்ளார்.
மேலும் அவர், 'என் தந்தை கேன்சரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நாளில் ஆழ்வார்பேட்டை தேவகி மருத்துவமனையில் மிகவும் சிரமப்பட்டபோது, வாசலில் இருந்த பிள்ளையார் கோவிலில் வேண்டிக் கொண்டேன். மீண்டு வருவாரேயானால் சரி அல்லது சிறிதே காலம் அதுவும் இப்படித்தான் கஷ்டப்பட்டபடி வாழ்வாரேயானால் அவரை நிம்மதியாக உன்னிடம் அழைத்துச்செல் என்று துக்கத்தின் உச்சத்தில் வேண்டிக் கொண்டேன்.
அப்படி விஜயகாந்த் சாரை சிரமப்படும் மனிதராக எனக்கு பார்க்கப் பிடித்ததில்லை. நான் யாரென உலகம் ஒப்புக்கொள்ளுமுன், என் முதல் படத்தைத் துவக்கி வைத்தவர்.
நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக முதலிடத்தைப் பெற்றவர். வாழ்வு விரைந்து முடிந்து விட்டாலும், கோடானுக்கோடி உள்ளங்களை ஆட்கொண்ட அருமை மனிதர்' என்றார்.
ஒரு எளிமையான, யதார்த்தமான,தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால்,ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்….
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 28, 2023
என் தந்தை கேன்ஸரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நாளில் ஆழ்வார்பேட்டை தேவகி ஆஸ்பத்திரியில் மிகவும் சிரம்ப்பட்ட போது,வாசலில்… pic.twitter.com/otoJGgCShv
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |