பல கட்சிகளில் பயணித்த நடிகர் ராதா ரவி.., தற்போது விஜய் கட்சியில் சேர விருப்பம்
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியில் சேர தயாராக இருப்பதாக ராதா ரவி விருப்பம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கினார். இவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது 69-வது படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்கினார்.
நடிகர் ராதா ரவி விருப்பம்
கடைசி தோட்டா படத்தில் நடித்த நடிகர் ராதா ரவி பட விழாவில் பேசுகையில், "நான் நடிப்பதற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.
நடிகர் என்பவர் இறந்தும் நடிப்பவன். அதே போல நடிகர் இறந்தாலும் அவன் நடித்த காட்சிகளும், கதாபாத்திரங்களும் ரசிகர்களின் கண் முன்பு வந்து செல்லும்.
தற்போது நான் எந்த கட்சியிலும் இல்லை. அரசியலுக்கு விஜய் வந்திருப்பது வரவேற்க வேண்டிய விடயம் தான். அவர் என்னை தமிழக வெற்றி கழகத்திற்கு அழைத்தால் நிச்சயம் சேருவேன்" என்றார்.
நடிகர் ராதா ரவி தனது அரசியல் பயணத்தை திமுகவில் இருந்து துவங்கினார். பின்னர் அதிமுகவில் இணைந்து எம்.எல்.ஏ ஆனார். அடுத்ததாக திமுகவில் இணைந்தார்.
அப்போது, நயன்தாராவை விமர்சித்த விடயம் தொடர்பாக கட்சியில் இருந்து மு.க.ஸ்டாலின் அவரை நீக்கினார். பின்னர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து 2019 -ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது ராதா ரவி எந்த கட்சியிலும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |