அவர் தட்டிலிருந்து எனக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டார்! விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர்விட்டு அழுத நடிகர் சூர்யா
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நடிகர் சூர்யா சென்று அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் மறைவு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவு திரையுலகினரை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் விஜயகாந்தின் உடலுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் சூர்யா, விஷால் உட்பட சில நடிகர்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக வரமுடியவில்லை என்று கூறியதுடன், தங்கள் இரங்கலை வீடியோ மற்றும் கடிதம் வெளியிட்டு வெளிப்படுத்தினர்.
சூர்யா அஞ்சலி
இந்த நிலையில் இந்தியா திரும்பிய நடிகர் சூர்யா, மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அவர் கண்ணீர்விட்டு கதறி அழுதபடி விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்தார். அதன் பின்னர் பேசிய நடிகர் சூர்யா,
'அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப ரொம்ப துயரமானது. மனசு அவ்வளவு கஷ்டமா இருக்கு. பெரியண்ணா-ன்னு ஒரு படம் அவரு கூட சேர்ந்து பண்ற வாய்ப்பு கிடைத்தது. 8 நாளில் இருந்து 10 நாள் வரை அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
ஒவ்வொரு நாளும் சகோதர அன்புடன், முதல் நாளே ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம்ன்னு கூப்பிட்டாரு. நான் அப்போ அப்பாவுக்காக வேண்டுதலின் இருந்ததால் அசைவ உணவு சாப்பிடவில்லை.
ஆனால், என்னடா நீ சைவம் சாப்பிடுற என்று கூறியதுடன், அவரோட தட்டில் இருந்து சாப்பாடு எடுத்து, நீ சாப்பிட்டு தான் ஆகணும்-ன்னு எனக்கு ஊட்டிவிட்டார். நீ நடிக்கிற உனக்கு சக்தி வேண்டும், வேற ஏதாவது வேண்டிக்கோ என்று அவர் கூறினார். ஒவ்வொரு நாளும் என்ன அப்படி பாத்துக்கிட்டார்.
டான்ஸ் மாஸ்டர்-ஐ கூப்பிட்டு extra steps எடுத்து வைங்க, நல்ல டான்ஸ் ஆடட்டும்ன்னு சொல்லுவாரு. அதே மாதிரி ஸ்டண்ட் மாஸ்டர்கிட்டயும் சொல்லுவாரு. 8 நாளும் அவரை நான் பிரம்மித்து பார்த்தேன்.
உச்ச நட்சத்திரம் தூரமா தான் இருப்பாங்க, ஆனா அவரு எல்லாத்தையும் பக்கத்துல வெச்சுப்பாரு. எளிதாக, எப்போ வேணாலும் அவர யாரா இருந்தாலும் அணுகலாம், பேசலாம். அவரோட துணிச்சல பார்த்து அசந்து போயிருக்கேன். அவர மறுபடியும் சந்திச்சு இன்னும் நீண்ட நேரம் பேச முடியலயேங்கற வருத்தம் ரொம்ப இருக்கு.
அவர மாதிரி இன்னொருத்தர் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகத்தை பார்க்க முடியலங்கறது எங்களுக்கு எல்லாமே பெரிய, ஈடுசெய்ய முடியாத இழப்பு. பெரியவங்கள இழக்கிறது எப்போவுமே துயரமான விடயம்.
அண்ணனோட இழப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவரோட குடும்பத்தாருக்கும், சொந்தங்களுக்கும், தொண்டர்களுக்கும் எல்லாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணனோட ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கிறேன். எப்போவுமே அவரோட நினைவில் இருப்போம். அவர் செஞ்ச விடயங்களை மறுபடியும் பார்ப்பது நன்றாக இருக்கிறது' என உருக்கத்துடன் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |