வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை நுஸ்ரத் ஃபரியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நடிகை கைது
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்துப் பரவலாக அறியப்பட்ட நடிகை நுஸ்ரத் ஃபரியா (31), கொலை தொடர்பான விசாரணை ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வெடித்த உள்நாட்டு கலவரத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் போது நடந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நுஸ்ரத் ஃபரியா மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டாக்கா ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளிநாடு செல்ல முயன்றபோது நுஸ்ரத் ஃபரியாவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர் அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரது வழக்கறிஞர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மே 22 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.
தாய்லாந்துக்கு செல்ல திட்டம்
நடிகை நுஸ்ரத் ஃபரியா தாய்லாந்துக்கு பயணிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் விமான நிலையத்தில் அவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தின் தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் 'முஜிப்: தி மேக்கிங் ஆஃப் எ நேஷன்' என்ற திரைப்படத்தில் ஷேக் ஹசீனாவாக நடித்ததன் மூலம் நுஸ்ரத் ஃபரியா மிகவும் பிரபலமானவர்.
பிரபல இயக்குனர் ஷியாம் பெனகல் இயக்கிய இந்தத் திரைப்படம், வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |