படப்பிடிப்பில் தற்கொலை செய்துகொண்ட நடிகையின் தாயார் திடீர் மாயம்! காதலனின் பெற்றோர் பரபரப்பு புகார்
மும்பையில் தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி நடிகை துனிஷாவின் தாயார் திடீரென காணாமல் போயுள்ளதாக, ஷீஸன் கானின் பெற்றோர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
நடிகை தற்கொலை
இந்தி தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா, படப்பிடிப்பு இடைவெளியின் போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பில் நடிகரும், துனிஷாவின் காதலருமான ஷீஸன் கான் கைது செய்யப்பட்டார். துனிஷாவுடனான நட்பை ஷீஸன் முறித்துக் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் ஷீஸனின் பெற்றோர் அளித்த பேட்டியில் துனிஷாவின் தற்கொலைக்கு காரணம் தங்கள் மகன் கிடையாது என்றும், துனிஷாவின் தாயார் வனிதா ஷர்மா தமது மகளை பணத்திற்காக நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர்.
துனிஷாவின் தாயார் மாயம்
இதனைத் தொடர்ந்து வனிதாவின் வீட்டிற்கு விசாரணை நடத்த பொலிஸார் சென்றபோது, அவரது வீடு பூட்டியிருந்தது. முந்தைய நாளே தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு அவர் கிளம்பிச் சென்றுவிட்டதாகவும், லொறியில் பொருட்களை கொண்டு சென்றதாகவும் பொலிஸார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கும்போது தெரிய வந்தது.
மேலும் பொலிஸார் கூறுகையில், 'வனிதாவிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக நாங்கள் சென்றோம். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அத்துடன் அவரது வீடே காலி செய்யப்பட்டிருந்ததுடன், செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சண்டிகரில் தன்னுடைய மகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பூஜை செய்ய வனிதா திட்டமிட்டிருக்கிறார்.
அவர் அங்கு சென்றிருக்கலாம் என்று நினைக்கிறோம். அவரின் வாக்குமூலம் இந்த வழக்கில் மிகவும் முக்கியம். எனவே அவரைத் தேடி கண்டுபிடிக்க எங்களது தனிப்படை சண்டிகர் செல்ல உள்ளது' என தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
இதற்கிடையில், ஷீஸனின் குடும்பத்துடன் துனிஷா மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதும், அவருக்கு மேற்கொண்டு நடிக்க விருப்பம் இல்லை என்பதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், தாய் வனிதாவுடன் நடிப்பது தொடர்பாக துனிஷாவுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். ஆனால் தாயிடம் கிடைக்காத அன்பு ஷீஸன் குடும்பத்திடம் இருந்து துனிஷாவிற்கு கிடைத்துள்ளது என்பதும் அதில் தெரிய வந்தது.
அத்துடன் ஆரம்பத்தில் இருந்தே துனிஷாவிற்கு ஒரு வகை அதிர்ச்சி தொடர்பான நோய் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போது ஷீஸன் ஜாமீன் மனு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.