காபூல் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி பலியான பிரித்தானியர்கள்: வெளிவரும் புதிய தகவல்
காபூல் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூன்று பிரித்தானியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார செயலர் டொமினிக் ராப் உறுதி செய்துள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல், தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை அடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவமும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தாக்குதலுக்கு காபூலில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் அமைப்பானது பொறுப்பேற்று கொண்டதுடன், அமெரிக்க துருப்புகளை நாங்கள் மிக அருகாமையில் நெருங்கினோம் என்ற தகவலையும் வெளியிட்டனர்.
இந்த தாக்குதலில் இதுவரை மொத்தம் 170 பேர்கள் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 200 பேர்கள் காயங்களுடம் தப்பியுள்ளனர். தற்போது சடலங்களை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரித்தானிய வெளிவிவகார செயலர் டொமினிக் ராப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நேற்றைய பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் மற்றும் மற்றொரு பிரித்தானியரின் குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்,
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன் என தெரிவித்துள்ளார். நம்மை நோக்கி உதவி கோருபவர்களுக்கு நாம் எப்போதும் மறுப்பு தெரிவித்ததில்லை என குறிப்பிட்ட டொமினிக் ராப், நாம் ஒருபோதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப் போவதில்லை என்றார்.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், பிரித்தானிய துருப்புகள் எவரும் பலியானதாக தகவல் இல்லை எனவும், ஆனால் 13 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் வந்திறங்கிய 2011 ஆகத்து மாதத்திற்கு பின்னர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இதுவெனவும் தெரிய வந்துள்ளது