டாடா நானோ மீண்டும் வருகிறது! இந்தியாவின் மலிவு விலை மின்சார காராக இருக்குமா?
ஒரு காலத்தில் இந்தியாவை கலக்கிய டாடா நானோ, இப்போது முற்றிலும் புதிய மின்சார அவதாரத்தில் மீண்டும் களமிறங்குகிறது.
டாடா நானோ EV
டாடா மோட்டார்ஸ், தனது புகழ்பெற்ற காம்பாக்ட் கார் மாடலை நானோ EV என்ற பெயரில், அதிநவீன மின்சார தொழில்நுட்பத்துடன் மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவின் மலிவான கார் என்ற அடையாளத்துடன் அறிமுகமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டாடா நானோ, சில காரணங்களால் விற்பனையை நிறுத்திய நிலையில், தற்போது, டாடா மோட்டார்ஸ் இந்த பிரபலமான பிராண்டிற்கு புத்துயிர் அளித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனமாக மாற்றி அமைக்கவுள்ளது.
பெட்ரோல் வேண்டாம்! இனி எலெக்ட்ரிக் தான்!
புதிய டாடா நானோ EV, வழக்கமான பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக, முழுக்க முழுக்க மின்சார பவர்டிரெய்னை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களுக்கான (EV) தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் தனது மின்சார வாகன (EV) சந்தையை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், நானோ EV அறிமுகம், ஆரம்ப நிலை மின்சார கார் (Entry-level Electric Car) பிரிவில் டாடா நிறுவனத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்
டாடா நானோ எலக்ட்ரிக் கார் (Tata Nano Electric Car), டாடா மோட்டார்ஸின் மிகவும் மலிவு விலை எலெக்ட்ரிக் வாகனமாக (Affordable Electric Vehicle) இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஏற்கனவே Tiago EV, Tigor EV மற்றும் Nexon EV போன்ற பிரபலமான எலெக்ட்ரிக் கார்களை டாடா விற்பனை செய்து வருகிறது.
இந்த வரிசையில் நானோ EV சேருவது, அடிப்படைத் தேவைகள் மற்றும் திறமையான நகர்ப்புற பயணத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் ரேஞ்ச்
புதிய நானோ எலக்ட்ரிக் கார் பல நவீன மேம்பாடுகளுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தனித்துவமான வடிவமைப்பு முந்தைய மாடலைப் போலவே இருக்கலாம், ஆனால் உட்புறம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் தற்போதைய காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்படும்.
டாடா மற்ற எலக்ட்ரிக் கார்களில் (EVs) பயன்படுத்தும் மின்சார மோட்டாரை விட சிறிய மற்றும் இலகுவான மோட்டார் இதில் பொருத்தப்படலாம்.
இது ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் (Driving Range) வழங்கும் திறன் கொண்டதாக இருக்கலாம், இது நகரங்களுக்குள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
டாடா நானோவின் புதிய மின்சார அத்தியாயம்
டாடா நானோ EV வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ விவரக்குறிப்புகள் மற்றும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த புதிய முயற்சி சந்தையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 புதிய மின்சார வாகன மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு வெறும் ஒரு லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட அசல் நானோவைப் போலவே, இந்த EV பதிப்பும் கவர்ச்சிகரமான விலையில் வந்தால், இந்தியாவில் பட்ஜெட் கார் சந்தையில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |