தாலிபான்கள் ஊடகத்தை முழுவதுமாக மூடிவிடுவார்கள்! ஆப்கானும் வடகொரியா போல மாறிடும்...பிரபல பத்திரிக்கையாளர் கடும் எச்சரிக்கை
தாலிபான்கள் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுவார்கள் என பொய்யான உறுதிமொழி அளித்துவிட்டு ஊடக நிறுவனங்களை மூடிவிடுவார்கள் என ஆப்கானிஸ்தானின் முன்னணி பத்திரிகையாளர் எச்சரித்துள்ளார்.
பிரபல பத்திரிக்கையாளரான மசூத் ஹொசைனி தான் இந்த குற்றம்சாட்டை முன் வைத்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு, சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் நிறுவனத்திற்காக பணியாற்றிய மசூத் ஹொசைனிக்கு வழங்கப்பட்டது. தற்போது, ஃப்ரீலான்ஸராக பணியாற்றிவரும் ஹொசைனி, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய அந்த நாளே காபூலிலிருந்து விமானம் மூலம் வெளியேறிவிட்டார்.
பெண்கள், சிறுமிகள் ஆகியோரை தலிபான்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்வது குறித்த சிறப்பு செய்தியை வெளிநாட்டு பத்திரிகையாளருடன் இணைந்து ஹொசைனி வெளியிட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது.
ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஊடகத்தின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஹொசைனி, நிலைமை மிகவும் மோசமாக மாறவுள்ளது. ஊடகத்தை ஒடுக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
ஆனால், அதனை மெதுவாக செய்கிறார்கள். முதலில் தாலிபான்கள் ஒருவரை பிடிப்பார்கள். பின்னர், தான் கொலை செய்வார்கள். இதுதான், தற்போது ஊடகத்திற்கு நடைபெற்றுவருகிறது. தலிபான்கள் ஊடகத்தை முழுவதுமாக மூடிவிடுவார்கள்.
இணையத்தையும் முழுவதுமாக முடக்கிவிடுவார்கள். இப்பகுதியின் மற்றொரு வட கொரியாவாக ஆப்கானிஸ்தான் மாறிவிடும்
பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுவார்கள் என பொய்யான உறுதிமொழி அளித்துவிட்டு தாலிபான்கள் மேற்கத்திய நாடுகளை ஏமாற்றிவருகிறார்கள் என கூறியுள்ளார்.