காபூலில் இருந்த குடும்பத்து பெண்களிடமிருந்து இரவில் வந்த போன் அழைப்பு! இந்தியாவில் இருந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி செய்தி... கதறி அழுத பரிதாபம்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர் இந்தியாவில் வசித்து வரும் நிலையில் சொந்த நாட்டில் தனது சகோதரர் தாலிபான்களால் சுட்டு கொல்லப்பட்ட தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஏ.எஸ் பாரக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்துவிட்டார். அதே சமயம் அவரின் மொத்த குடும்பமும் காபூலில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள UNHCR அலுவலத்தின் முன்னர் ஆப்கானை சேர்ந்தவர்கள் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய நிலையில் இந்தியாவில் உள்ள தங்களுக்கு அகதி அந்தஸ்து மற்றும் மீள்குடியேற்றம் கோரி அவர்கள் போராடி வருகின்றனர். இதில் பாரக்கும் கலந்து கொண்டார்.
அப்போது தான் செய்தியாளரிடம் தனது சகோதரருக்கு நடந்த கொடுமை குறித்து வேதனையுடன் பேசினார். பாரக் கூறுகையில், எனக்கு கடந்த ஞாயிறு இரவு காபூலில் இருந்து எனது குடும்பத்து பெண்கள் போன் செய்தார்கள்.
அங்குள்ள எங்கள் வீட்டுக்கு தாலிபான்கள் வந்து என் சகோதரர் குறித்து கேட்டுள்ளனர். பின்னர் இன்னொரு அறையில் இருந்த அவரை வெளியில் இழுத்து போட்டு 6 துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு கொன்றதாக கூறினார்கள்.
இதை கேட்டதும் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். என் சகோதரர் அமெரிக்க துருப்புக்களுக்காக வேலை செய்ததால் தாலிபான்கள் அவரை தேடி வந்து கொன்றுள்ளனர். இந்த தகவலை கேட்டு எனக்கு தலைசுற்றி மயக்கமே வந்துவிட்டது.
என் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தார் போனில் என்னிடம் நள்ளிரவில் கதறி அழுதனர்.
உயிரிழந்த என் சகோதரருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அவர்கள் கண்முன்னாலேயே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாலிபான்கள் என் சகோதரர்களின் தரவுகளை பெற்றிருக்க வேண்டும், அவர் அமெரிக்க துருப்புகளுடன் பணிபுரிந்ததை கண்டுபிடித்ததால் தான் சுட்டு கொன்றுள்ளனர் என கூறியுள்ளார்.